அடைக்கலம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் விடயத்தில் ஐரோப்பிய நீதிமன்றம் திருப்புமுனைத் தீர்ப்பு

பிரித்தானியாவால் அடைக்கலம் மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரை இலங்கைக்குத் திருப்பியனுப்ப வேண்டாம் என ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் இன்று மிக முக்கிய தீர்ப்பளித்துள்ளது. இலங்கையில் பாரிய சித்திரவதைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற காரணத்தினாலேயே இந்தத் தீர்ப்பை அளிப்பதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கான தீர்ப்பை இன்று வெளியிட்டிருக்கும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் கொழும்புக்கு நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தில் வைத்து, விசாரணைகளுக்குஉட்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவோர் முன்னரும் கைது செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அது தொடர்பான பதிவுகள் சிறீலங்கா அரசாங்கத்தின் வசம் இருக்கக்கூடும் என்றும்,

அவ்வாறானோரின் உடலில் காயங்கள் எவையும் இருந்தால், அது அவர்கள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் நிலைக்கு இடமளிக்கும் என்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

இவ்வாறான அபாயத்தை எதிர்நோக்கக்கூடிய விண்ணப்பதாரிகளை கொழும்புக்கு நாடுகடத்துவது, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சாசனத்தின் மூன்றாவது சரத்தை மீறும் செயலாக அமையும் என்றும்
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்டோர் கொழும்பு நகரில் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களை விட, கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள்
அதிகமாக இருப்பதாகவும், எனினும் எந்தவொரு அகதித் தஞ்ச விண்ணப்பமும் பொதுப்படையாக அல்லாது, தனிப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையிலேயே ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த வகையில், கொழும்புக்கு நாடுகடத்தப்படும் அனைத்துத் தமிழர்களும், அபாயத்தை எதிர்நோக்ககூடும் எனக் கூற முடியாது என்றும், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், துரோகிகளாகவும், எதிரிகளாகவும் இனம்காணப்படுவோர் தவிர்ந்த ஏனைய சாதாரண பொதுமக்களுக்கு, கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளால் எவ்வித ஆபத்தும் ஏற்படப் போவதில்லை என்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்தத் தீர்ப்பினால் பிரித்தானியாவில் அடைக்கலம் மறுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் திருப்பியனுப்பப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவுள்ளன.

1999 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் அடைக்கலம் கோரிய, 33 வயதான இலங்கைத் தமிழர் தொடர்பிலேயே இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இவர் தமது மனுவில் இலங்கையில் இருந்த போது பல தடவைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்டுத் தாம் சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கிய ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், தமக்கு இலங்கைத் தமிழர்களிடம் இருந்து பல மனுக்கள் வந்திருப்பதால், சுமார் 342 பேர் தொடர்பில் பிரித்தானியா விதித்திருக்கும் நாடு கடத்தல் உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது

0 பின்னூட்டம்(கள்):